விதவையான, விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடி - காதல் மன்னன் அதிரடி கைது
கணவனை இழந்து விதவையான, விவாகரத்தான பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி லட்சக்கணக்கில் நகை மோசடியில் ஈடுபட்ட காதல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.;
கைதான காதல் மன்னன் பெயர் முகமது ஷபான் (வயது 36). இவருக்கு ரஹமத்துல்லா என்ற பெயரும் உண்டு. பி.சி.ஏ. பட்டதாரி. புதுச்சேரி, முத்தையால் பேட்டையைச் சேர்ந்தவர். திருமணமாகி, 2 குழந்தைகளுக்கு தந்தை. இவர் காதல் மன்னனாக வலம் வந்தார். சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் பேசி, பழகுவார். நான் ஒரு தொழில் அதிபர், நகைக்கடை வைத்துள்ளேன். ஸ்டீல் கம்பெனி வைத்துள்ளேன், இளம் விதவைப்பெண்களுக்கு வாழ்வு கொடுப்பதாக சபதம் பூண்டுள்ளேன், என்பார். கணவனை பிரிந்த பெண்களாக இருந்தால், அதற்கு தகுந்தார் போல, கதையை மாற்றி சொல்வார்.
பின்னர் காதல் வலை வீசுவார். நேரில் சந்திக்க ஆசையாக உள்ளது, என்று வலையில் விழுந்த பெண்களிடம் பேசி, நேரில் சந்திப்பார்.
அடுத்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, பெண்களிடம் இனிப்பாக பேசி, அவர்களிடம் நகைகள், பணத்தை லட்சக்கணக்கில் பறிப்பார். தனது வருங்கால கணவர் தானே என்று மடியில் சாய்ந்த பெண்களை இச்சைக்கும் பயன்படுத்தி கொள்வார். ஆனால் இவரது நோக்கம் பணம், நகைகளை சுருட்டுவது தான். தனது நோக்கம் நிறைவேறியவுடன் குறிப்பிட்ட பெண்களின் உறவை துண்டித்து கொள்வார். அதன்பிறகு இவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடும்.
இவர் தனது உண்மையான முகவரியை தன்னிடம் பழகிய பெண்களிடம் கொடுப்பதில்லை. இவரது காதல் வலையில், சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மாட்டினார். அவர் கணவரை விவாகரத்து செய்தவர். 2-வது திருமணத்துக்கு, நல்ல மணமகன் தேவை என்று வாட்ஸ்-அப் மூலம் தகவல் வெளியிட்டிருந்தார். அதை தெரிந்து கொண்ட முகமது ஷபான், குறிப்பிட்ட பெண்ணிடம் ஆசையாக பேசி வலை விரித்தார். வலையில் விழுந்த அந்த பெண்ணை வழக்கமான தனது பாணியில் பேசி, திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார்.
அவருக்கு அவருடைய முதல் கணவர், செய்வினை வைத்துள்ளதாகவும், அதற்கு மசூதியில் மந்திரம் ஓதி சரி செய்துவிடலாம் என்றும் கதை விட்டார். மந்திரம் ஓதுவதற்கு நிறைய தங்க நகைகள், பூஜையில் வைப்பதற்கு தேவைப்படுகிறது என்று சொல்லி கொஞ்சம், கொஞ்சமாக 415 பவுன் நகைகள் வரை பறித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று ஆசைக்கனவுகளுடன் இருந்த அந்த பெண்ணையும், தனது மோசடி வலையில் விழவைத்த முகமது ஷபான் வழக்கம்போல, நகைகளை சுருட்டிக்கொண்டு பேசுவதை நிறுத்திக்கொண்டார். இவரிடம் இதுபோல மோசம்போன பல பெண்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. ஆனால் இந்த பெண், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து, காதல் மன்னன், முகமது ஷபான் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
முகமது ஷபான் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் நிஷா, உதவி கமிஷனர் ஜான் விக்டர் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
காதல் மன்னன் முகமது ஷபான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பறித்த 415 பவுன் நகைகளில் சிலவற்றை அடகு வைத்தும், இன்னும் சிலவற்றை விற்பனை செய்தும் ஜாலியாக செலவு செய்துள்ளது தெரியவந்தது. அவற்றை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். முகமது ஷபானிடம் மோசம்போன பெண்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.