கிராமசபை கூட்டத்தில் கண்ணீர்விட்டு கதறி அழுத ஊராட்சி மன்ற தலைவி

பதாகையில் தவறாக நோட்டீஸ் ஒட்டியதற்கு ஊராட்சி மன்ற தலைவி தான் காரணம் என்று கிராமசபை கூட்டத்தில் கூறியதால் ஊராட்சி மன்ற தலைவி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-02 17:12 GMT

அவினாசி,

பதாகையில் தவறாக நோட்டீஸ் ஒட்டியதற்கு ஊராட்சி மன்ற தலைவி தான் காரணம் என்று கிராமசபை கூட்டத்தில் கூறியதால் ஊராட்சி மன்ற தலைவி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் கிராமசபை கூட்டம் அங்குள்ள அம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணபதிசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் நந்தகுமார் வரவேற்றார். பற்றாளராக ஊராட்சி ஒன்றிய அலுவலர் மங்கையர்க்கரசி பங்கேற்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிரபு என்பவர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிக்காக ரசீது பெற்றுச் சென்றதாகவும், பிறகு வேண்டுமென்றே பணம் செலுத்தாமல் இருந்ததாகவும் ஊராட்சி நிர்வாகத்தினர் பாதாகையில் ஒட்டியதுடன் இது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியுள்ளனர் என்று பிரபு தரப்பினர் கூறினர். இதற்கு உடனடியாக உரிய பதில் அளித்து விட்டு கிராமசபை கூட்டத்தை தொடங்க வேண்டும் என்று பிரபு தரப்பினர் கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் ஊராட்சி அலுவலகத்தில் தவறாக பதாகையில் ஒட்டுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தான் காரணம் எனக் கூறியும், பொய்யாக அவதூறு பரப்பியதற்காக தலைவர் பதவி விலக வேண்டும், ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பிரபு தரப்பினர் தெரிவித்தனர். இதனால் மன வேதனையடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரி கிராம சபைக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் நந்தகுமார் கூறுகையில், பணம் கொண்டு வருவதாகக் கூறித் தான் ரசீது பெற்றுச் சென்றனர். ஆனால் இது வரை கொடுக்கவில்லை என்றார். பணம் கொடுக்காததால் தான் பதாகையில் ஒட்டினோம் என்றார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஜயகுமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது " பிரபு வரி செலுத்தியதற்காக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். நீண்ட நேரத்துக்கு பிறகு கிராம சபைக் கூட்டம் தொடங்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்