வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மானபங்கப்படுத்த முயன்றதால் விஷம் குடித்து பெண் தற்கொலை

வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி மானபங்கப்படுத்த முயன்றதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்தார்.

Update: 2022-06-20 16:26 GMT

வேடசந்தூர் அருகே உள்ள நாயக்கனூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சித்ரா (27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று கார்த்திக், நாயக்கனூரில் ஒரு பெட்டிக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த கோணமண்டையன் (40), பிரபாகரன் (21) ஆகியோர் மதுபானம் குடிக்க ரூ.1,000 கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி விட்டு கார்த்திக் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று இரவு கோணமண்டையன், பிரபாகரன் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்றனர். அங்கு தனியாக இருந்த கார்த்திக் மனைவி சித்ராவிடம் மது குடிக்க ரூ.200 கேட்டனர். பணம் தராவிட்டால் மானபங்கம் செய்து, கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதற்கிடையே பணம் கொடுக்காததால் கோணமண்டையனும், பிரபாகரனும் சித்ராவை கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் சித்ராவுக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது.

தனக்கு நடந்த சம்பவம் குறித்து, தனது உறவினரிடம் கூறி சித்ரா வேதனை அடைந்தார். இதனால் மனம் உடைந்த சித்ரா, விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார். அதன்பேரில் கோணமண்டையன், பிரபாகரன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்