வெண்டைக்காய் சாகுபடி அறுவடை பணிகள் தொடக்கம்
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
முத்தூர்
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி பாசனம்
திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி மிகவும் பிரதானமாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் கால்வாயில் திறந்து விடப்படும் முறை, தொடர் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எண்ணெய் வித்து பயிர், நஞ்சை சம்பா நெல், தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பயிர்கள், கீரை வகைகள் சாகுபடி செய்து பயன் அடைந்து வருகின்றனர்.
வெண்டைக்காய் சாகுபடி
மேலும் இப்பகுதி விவசாயிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும், குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் வெண்டைக்காய் சாகுபடி பணிகளை தொடங்கினர். இதன்படி
1 ஏக்கர் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார் கட்டுதல், அடி உரம் இடுதல், மேல் உரம் இடுதல், விதை ஊன்றுதல், களை எடுத்தல், உர நிர்வாகம், களைக்கொல்லி பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
கூடுதல் வருமானம்
இதன்படி இப்பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி விவசாயிகள் வெண்டைக்காய்களை தற்போது விவசாயிகள் ஓரளவு பிஞ்சு காய்களாக இருக்கும் போது அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். முற்றிய வெண்டைக்காய்கள் விற்பனைக்கு மற்றும் சமையல் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல.
இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த வெண்டைக்காய்களை முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கயம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சிவகிரி, வடபழனி,
கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வார சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளுக்கு சிறு பெட்டிகளில் வரிசையாக அடுக்கியும், சாக்குகளில் மூட்டைகளாக கட்டி கொண்டும் நேரில் சென்று மொத்த வியாபாரத்திற்கு ஏதுவாக உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
முத்தூர் நகர, சுற்று வட்டார கிராம பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் குறையாத நிலையிலும் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் வெண்டைக்காய்கள் சாகுபடி செய்து உள்ள கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.