வெண்டைக்காய் சாகுபடி அறுவடை பணிகள் தொடக்கம்
வெண்டைக்காய் சாகுபடி அறுவடை பணிகள் தொடக்கம்
முத்தூர்
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டைக்காய் அறுவடை பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கீழ்பவானி பாசன பகுதி
திருப்பூர் மாவட்டம் முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி மிகவும் பிரதானமாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை இருந்து வருகிறது.
இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் கால்வாயில் திறந்து விடப்படும் முறை, தொடர் தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் எண்ணெய் வித்து பயிர், நஞ்சை சம்பா நெல், தோட்டக்கலை பயிர்கள், காய்கறி பயிர்கள், கீரை வகைகள் சாகுபடி செய்து பயன் அடைந்து வருகின்றனர்.
வெண்டைக்காய் சாகுபடி
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர் சாரல், மிதமான, பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 மாதங்களாக முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிணறுகள், குளங்கள் ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மேலும் கிராம பகுதிகளில் உள்ள ஓடைகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதன்படி இப்பகுதி விவசாயிகள் 1 ஏக்கர் வெண்டைக்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பார் கட்டுதல், அடி உரம் இடுதல், மேல் உரம் இடுதல், விதை ஊன்றுதல், களை எடுத்தல், உர நிர்வாகம், களைக்கொல்லி பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ள வெண்டை செடியில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து அயல்மகரந்த சேர்க்கை மூலம் வெண்டை பிஞ்சுகள் உருவாகி வெண்டைக்காய்களாக பச்சை நிறத்தில் நன்கு காய்த்து உள்ளன.
கூடுதல் வருமானம்
இதன்படி இப்பகுதிகளில் வெண்டைக்காய் அறுவடை பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இதன்படி விவசாயிகள் வெண்டைக்காய்களை தற்போது விவசாயிகள் ஓரளவு பிஞ்சாக இருக்கும் போது அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர்.
இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த வெண்டைக்காய்களை முத்தூர், நத்தக்காடையூர், வெள்ளகோவில், காங்கயம் மற்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சிவகிரி, கந்தசாமி பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வார சந்தை மற்றும் தினசரி காய்கறி கடைகளுக்கு மூட்டைகளாக கட்டி நேரில் கொண்டு சென்று மொத்தமாக உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து பலன் அடைவார்கள்.
இப்பகுதிகளில் குறுகிய காலத்தில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிகமாக மகசூல் தரும் வெண்டைக்காய்கள் சாகுபடி கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.