பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது - ராமதாஸ்

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-23 09:35 GMT

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது, வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும், அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும், ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை, ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும், முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும், தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட, 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத்தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது, பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

ஆந்திரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் - சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்