அடிப்படை வசதிகள் இல்லை, பாதுகாப்பு குறைபாடு: 'சின்னசுருளி' அருவிக்கு சிறப்பு திட்டங்கள் வருமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

‘சின்னசுருளி' அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-01 16:47 GMT

'சின்னசுருளி' அருவி

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கோம்பைத்தொழு அருகே மேகமலை வனப்பகுதியில் புதிதாக அருவி ஒன்று தோன்றியது. அது மேகமலை அருவி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது 'சின்னசுருளி' அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அருவியில் ஆண்டின் பெரும் பகுதி நாட்களில் தண்ணீர் விழும். இதனால், இங்கு வந்து செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. அடிப்படை வசதிகளும் இல்லை. கோம்பைத்தொழு வழியாக செல்லும் வாகனங்கள் அருவியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்தப்படும். அங்கிருந்து நடந்து தான் அருவிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பாதையும் உருக்குலைந்து கிடக்கிறது. மழை பெய்தால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் வழுக்கி வழும் நிலைமையில் பாதை உள்ளது.

பாதுகாப்பு குறைபாடு

அருவியில் குளிப்பதற்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. தண்ணீர் விழும் பகுதியை சுற்றிலும் மக்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கு இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மழைக்காலங்களில் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்து விட்டன. எனவே வலுவான தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

அருவியில் கழிப்பிட வசதி, நீண்ட தூரம் இருந்து வரும் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடைகள் எதுவும் கிடையாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் இல்லை. பெண்கள் உடை மாற்றுவதற்கான கட்டிடம் உள்ளது. ஆனால் அது அறைகள் வடிவில் இல்லாமல் ஒரே வளாகமாக உள்ளதால் உடைமாற்றும் அறையிலும் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. எனவே பாதுகாப்பான உடை மாற்றும் அறை அமைக்க வேண்டும்.

சிறப்பு திட்டம்

மேலும் இந்த அருவி பகுதியானது திறந்தவெளி மதுபான பார் ஆக மாறி வருகிறது. விடுமுறை காலங்களில் மதுபான பிரியர்கள் பலர் மதுபான பாட்டில்களுடன் அருவிக்கு படையெடுக்கின்றனர். மது குடித்துவிட்டு பாட்டில்களை கண்ட இடங்களில் உடைத்து வீசுவதால் சுற்றுலா பயணிகளுக்கும், வன உயிரினங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

உள்ளாட்சி அமைப்பு சார்பில் வாகனங்களுக்கு ரூ.20 முதல் ரூ.100 வரை நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலித்தபோதிலும் அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை.

எனவே சின்னச்சுருளி அருவியை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கி அரசின் வருவாயை பெருக்கும் வகையிலும், அங்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கவும் வனத்துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை இணைந்து சிறப்பு சுற்றுலா மேம்பாட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

அடிப்படை வசதி

சின்னசுருளி அருவி பகுதியில் சுற்றுலா மேம்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து மயிலாடும்பாறையை சேர்ந்த வர்த்தகர் மணிகண்டன் கூறுகையில், "சின்னசுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடமாக உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இங்கு சிறப்பு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தினால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் இந்த பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளும் வளர்ச்சி பெறும். விவசாயம் மற்றும் கூலி வேலையை நம்பி இருக்கும் மக்களுக்கு சுற்றுலா ரீதியான தொழில் மற்றும் வணிக வளர்ச்சியும், அதன் மூலம் வாழ்வாதாரமும் கிடைக்கும்" என்றார்.

வருசநாட்டை சேர்ந்த விவசாயி பாண்டியன் கூறுகையில், "இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசித்து, அருவியில் குளித்து மகிழ மக்கள் வந்து செல்கின்றனர். இந்த இயற்கை அழகை சிதைக்காத வகையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.

மதுபான பாட்டில்களை எக்காரணத்தை கொண்டும் இங்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. அருவி பகுதியிலும், அருவிக்கு செல்லும் வழியிலும் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்