சிறுவனுக்கு பாலியல் தொல்லை வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

Update: 2023-07-28 21:04 GMT

பாலியல் துன்புறுத்தல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரபிள்ளை வலசு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுவனை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் அங்கு வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுவனின் பெற்றோர் தரப்பில் ஹரிகிருஷ்ணன் மீது வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக தொழிலாளி ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்