உருட்டுக்கட்டையால் பெண்ணை தாக்கிய தொழிலாளி சிறையில் அடைப்பு

ஆலங்குடி அருகே உருட்டுக்கட்டையால் பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-11-25 20:01 GMT

தொழிலாளி

ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தோப்புக்கொல்லையை சேர்ந்தவர் தங்கராசு (வயது 42), தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர்களது உறவினரான மாங்கோட்டை காத்தான்விடுதியை சேர்ந்த மணிகண்டனின் மனைவி இலக்கியா (26) கடந்த 5 ஆண்டுகளாக தங்கராசுவின் குழந்தைகளை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தங்கராசு தனது குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு இலக்கியாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அவரது குழந்தைகள் தங்கராசுவிடம் செல்ல மறுத்துவிட்டனர்.

சிறையில் அடைப்பு

இந்தநிலையில் நேற்று இலக்கியா வீட்டிற்கு சென்ற தங்கராசு உருட்டுக்கட்டையால் இலக்கியாவை சரமாரியாக தாக்கி, பாட்டிலால் வலது கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இலக்கியா கீழே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்