போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் எதிரே மர்மமான முறையில் பிணமாக கிடந்த தொழிலாளி

போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் எதிரே மர்மமான முறையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2023-05-11 20:50 GMT

ஆம்னி பஸ் நிலையம்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. ஒப்பந்த காலம் முடிந்ததால், தற்போது அங்கு செயல்பட்டு வந்த ஆம்னி பஸ் நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

தற்போது அந்த இடம் பயன்பாடு இன்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த இடத்தை சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அங்கு மது அருந்த சென்ற வடமாநில வாலிபர் ஒருவர், அங்கு இடிந்து கிடந்த கட்டித்தில் சிறுநீர் கழிக்க சென்றார்.

அழுகிய நிலையில் பிணம்

அப்போது அந்த கட்டிடத்தில் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இடத்துக்கு எதிரே இருந்த கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஓடிச்சென்று இதுபற்றி கூறினார்.

உடனே கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் கென்னடி தலைமையில் கண்டோன்மெண்ட் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அங்கு, இறந்து கிடந்தவருடைய பின்னந்தலையில் அடிபட்ட காயம் இருந்தது. மேலும் அவர் அணிந்திருந்த சட்டையில் டிரைவிங் லைசன்சு இருந்தது.

பன்றி வளர்க்கும் தொழில்

அதை எடுத்து பார்த்த போது, அவர் திருச்சி கே.கே.நகர் நேதாஜிநகரை சேர்ந்த ராஜூவின் மகன் ரமேஷ் (வயது 41) என்பதும், அவர் பன்றிகள் வளர்த்து வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதும், பின்னர் அவர் உறவினர்களுடன் சோ்ந்து மது அருந்தியதும் தெரியவந்தது. அத்துடன் அவர் வந்த மோட்டார் சைக்கிள் ஜங்ஷன் ரெயில் நிலைய பகுதியில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மர்ம சாவு

அவர் வைத்திருந்த பொருட்கள் அப்படியே இருந்ததாலும், பின்னந்தலையில் அடிபட்டு இருந்ததாலும் மதுபோதையில் சிறுநீர் கழிக்க ஒதுங்கியபோது போதையில் நிலைதடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து ரமேசின் தாயார் மேரி கொடுத்த புகாரின் பேரில் மர்ம சாவு என்று கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ரமேசுக்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்