வளர்ப்பு நாய் கடித்து தொழிலாளி சாவு - திருப்பூரில் பரபரப்பு

முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-26 14:19 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உப்புப்பாளையம் சாலை அரசு நூலகம் பின்புறத்தில் வசித்து வந்தவர் முனுசாமி (வயது 42). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (39), இவர்களுக்கு திலகவதி (20), திவ்யா (15) என்ற 2 மகள்களும், பரத் (12) என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மைசூருவில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

பின்னர் மனைவி, குழந்தைகள், வெள்ளகோவில் திரும்பிவிட 3 நாட்கள் கழித்து முனுசாமி வந்துள்ளார். மைசூருவில் உறவினர் வீட்டு வளர்ப்பு நாய் கால்களால் தொற்றியதில் முனுசாமிக்கு கால்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. வேறு உடல் நிலை தொந்தரவு அறிகுறி எதுவும் இல்லை. கடந்த வாரம் வெள்ளகோவிலில் முனுசாமி வீட்டில் வளர்த்து வந்த நாய் அவருடைய காலில் கடித்து விட்டது. இதையடுத்து அந்த நாய் இறந்துவிட்டது.

இதற்கிடையில் முனுசாமிக்கு மூச்சு இறைச்சல், அதிக தண்ணீர் தாகம் ஏற்பட்டு வெள்ளகோவில் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர் அறிவுரையின் பேரில் கரூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது 2 தடவை நாய் கடித்ததாக டாக்டரிடம் கூறினார். பரிசோதனையில் வெறிநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய குடும்பத்தினருக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய் கடித்த பின் அதை கண்டுகொள்ளாததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்