தூத்துக்குடியில் தொழிலாளி அடித்துக்கொலை

தூத்துக்குடியில் செய்வினை வைத்ததாக கருதி தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-20 18:45 GMT

தூத்துக்குடியில் செய்வினை வைத்ததாக கருதி தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மகராஜன் (வயது 45). தொழிலாளியான இவர் பிளம்பிங் வேலைக்கு சென்று வந்தார். தூத்துக்குடி ராஜீவ்நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (46). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

டிரைவரான மாரிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லோடு ஆட்டோ ஓட்டி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதே நேரத்தில், அவரை மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் மாரிமுத்து தனது நண்பர் மகராஜன் தனக்கு செய்வினை வைத்து விட்டதாகவும், அதனால் தான் கஷ்டமான சூழலுக்கு தான் தள்ளப்பட்டு விட்டதாகவும் கருதினார்.

அடித்துக்கொலை

நேற்று மாலையில் அவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன்பிறகு மகராஜன் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள மையவாடிக்கு சென்று அங்குள்ள ஒரு கொட்டகைக்குள் படுத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து மாரிமுத்து அங்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, அந்த பகுதியில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து மகராஜனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த மகராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நண்பர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு செய்வினை வைத்து விட்டதாக கருதி தொழிலாளியை அவரது நண்பரே அடித்துக் கொலை ெசய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்