மது பாட்டிலை தள்ளிவிட்டதால் ஆத்திரம் - வாலிபருக்கு கத்திக்குத்து

கோவை அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-11 13:29 GMT

கோவை:

கோவை துடியலூர் ஜி.என்.மில் அடுத்த எஸ்.என். பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரத்குமார் (வயது 24). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் எஸ்.என். பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். அங்கு தனது நண்பருடன் அமர்ந்து மதுகுடித்தார்.

அப்போது பரத்குமார் அருகில் அமர்ந்து குடித்து கொண்டு இருந்த நபரின் மது பாட்டிலை தெரியாமல் தட்டி விட்டார். இதனால் 2 பேருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்தனர்.

பின்னர் பரத்குமார் தனது நண்பரை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த அந்த நபர் அவர்களது பின்னால் வந்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பரத்குமாரை குத்தினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார்.

பலத்த காயம் அடைந்த பரத்குமாரை அவரது நண்பர் ரமேஷ் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். இதுகுறித்து பரத்குமார் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (42) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்