நகைக்காக 2 மூதாட்டிகளை கொன்ற தொழிலாளி கைது

பள்ளிபாளையம் அருகே 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;

Update:2023-05-22 02:14 IST

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கடந்த மார்ச் மாதம் பாவாயி (வயது 78) என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினர்.

இதைத்தொடர்ந்து கடந்த 12-ந் தேதி காடச்சநல்லூர் அருகே பில்லுமடை காடு பகுதியில் பழனியம்மாள் (64) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காதில் இருந்த தோடுகள் பறிக்கப்பட்டு இருந்தன. தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.

விசாரணை

இந்த நிலையில் தனிப்படையினர் ஓடப்பள்ளிக்கு சென்று விசாரணையை முடித்து கொண்டு வரும்போது தாஜ்நகர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு நபர் போலீஸ் ஜீப்பை கண்டதும் ஓட தொடங்கினார். அந்த நபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

இதையடுத்து விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரியவந்தது. கூலித்தொழிலாளியான இவர் ஓடப்பள்ளி அருகே தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபோது விவசாய நிலத்தில் தனியாக இருந்த பாவாயியை மிரட்டினார்.

மேலும் அவர் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு கூறி உள்ளார். அப்போது பாவாயி சத்தம் போடவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கோர்ட்டில் ஆஜர்

இதேபோல் காடச்சநல்லூர் பில்லுமடை காடு பகுதியில் தனியாக இருந்த பழனியம்மாளின் தலையில் அடித்ததுடன், முகத்தில் தாக்கி கொன்றுவிட்டு அவருடைய காதில் இருந்த 2 தோடுகளை பறித்து சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்