தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் 19 தராசுகள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-07-26 11:08 GMT

திருவண்ணாமலையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வில் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திடீர் ஆய்வு

திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் அறிவுரையின்படி திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் அதிகாரிகள் திருவண்ணாமலை மார்க்கெட் மற்றும் சந்தைப்பகுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறுமுத்திரையிடப்படாத 19 தராசுகளை பறிமுதல் செய்தனர். முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் எடை குறைவு, மறுமுத்திரையிடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல் மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர்.

மேலும் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் பொட்டல பொருட்கள் அறிவிக்கை இல்லாதது மற்றும் அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் குறித்தும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களிடையே குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தினால் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறை தண்டனை

மேலும் குழந்தைகளை பணிக்கு அமர்த்தும் நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்