ரெயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

கும்பகோணம் வழியாக வந்த ரெயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-08 21:19 GMT

கும்பகோணம்,

கும்பகோணம் வழியாக வந்த ரெயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தீவிர சோதனை

திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சில மர்ம நபர்கள் சாக்கு முட்டையில் குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

50 கிலோ குட்கா

இந்த சோதனையில் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த ஒரு சாக்கு மூட்டையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டை குறித்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ரயில்வே தனிப்படை போலீசார் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அந்த சாக்கு மூட்டையை இறக்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் 400 கிராம் எடையுள்ள 129 குட்கா பொட்டலங்கள் 50 கிலோவுக்கு இருந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதைத்தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா போதை பாக்கெட்டுகளை கும்பகோணம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் அரசின் வழிகாட்டுதல் படி அழிக்க ஒப்படைத்தனர். மேலும் குட்காவை கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்