குறுவை நடவு பணிகள் மும்முரம்

நீடாமங்கலம் பகுதியில் குறுவை நடவு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2023-07-13 18:45 GMT

அறுவடை பணிகள்

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 34 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து விவசாயிகள் சாதனை படைத்தனர். இந்த ஆண்டு நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன் படுத்தி 16,500 ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி செய்து அதற்கான அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் குறுவை சாகுபடிக்கு கடந்த மே 24-ந்தேதியே மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் சாகுபடி பணியை மும்முரமாக தொடங்கி முடித்தனர்.

குறுவை சாகுபடி

இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கக்கூடிய தென்மேற்கு பருவ மழை தாமதமாகவே தொடங்கி குறைவான மழை பெய்ததால் மேட்டூர் அணையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு வழக்கம் போல் கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனாலும் சரியான நீர் வரத்து இல்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்ததில் இருந்து விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு மும்முரமாகி சிலர் விதைப்பு விட்டனர்.

சிலர் நாற்று விட்டு நடவுப்பணிக்கு தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

நாற்று பறிக்கும் பணி

ராயபுரம், பூவனூர், ராஜப்பையன்சாவடி, ரிஷியூர், பெரம்பூர், பரப்பனாமேடு, காளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீரை மின் மோட்டாரை பயன்படுத்தி முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு தயாராக இருந்த விவசாயிகள் தற்போது நாற்று பறி்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடவு பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்