ஊராட்சிக்கு நிதி ஒதுக்காவிட்டால்பதவியை ராஜினாமா செய்வேன் என தி.மு.க. கவுன்சிலர் அறிவிப்புகுறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு

ஊராட்சிக்கு நிதி ஒதுக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என தி.மு.க. கவுன்சிலர் அறிவித்ததால் குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-20 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கலையரசி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுகுமாரன் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது, தி.மு.க. கவுன்சிலர் ராஜபாண்டியன் பேசும்போது, இதுவரை வழுதலம்பட்டு ஊராட்சி வளர்ச்சி பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதிமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. எனவே, அடுத்த கூட்டத்தில் நிதி ஒதுக்காவிட்டால் ஒன்றிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பா.ம.க. கவுன்சிலர் கஸ்தூரி பேசுகையில், கீழூர் ஊராட்சியில் பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால் மாணவர்கள் அமர்ந்து படிக்க இடமில்லை. எனவே, பள்ளி கட்டிடங்கள் விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர்களின் கோரிக்கைகளை கேட்ட ஒன்றியக்குழு தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் குடிநீர் சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது, சட்டப்பேரவையில் 3-வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைய இருந்ததை தடுத்து நிறுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்