தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை

Update: 2023-03-12 20:17 GMT

வாழப்பாடி:-

தமிழகத்தில் குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

குறவன் குறத்தி ஆட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் கோவில் விழாக்களில் குறவன் குறத்தி என்கிற நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குறவன் குறத்தி வேடமிடும் கலைஞர்கள் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் உள்ளனர். இதனால் குறவ சமூகத்திற்கு இழிவு ஏற்படுவதாகவும், தமிழக குறவர், மலைக் குறவர் இன மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் குறவன் குறத்தி ஆட்டத்தை தடை செய்ய வேண்டுமென இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் சார்பில் வனவேங்கைகள் கட்சியினர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது குறவன், குறத்தி ஆட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அரசாணை வெளியீடு

இதற்கிடையே தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, கிராமியக் கலை பட்டியலில் இருந்து குறவன் குறத்தி நடனத்தை ரத்து செய்ய வேண்டுமென குறவன், மலைக்குறவன், கொறவன் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து குறவன் குறத்தி நடனத்துக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு காரணமாக இருந்த தமிழக குறவன், மலைக்குறவன், கொறவன் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொ.செல்வராஜிக்கும், அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் பாராட்டு விழா வாழப்பாடியில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவுக்கு சங்க நிர்வாகி பிரபாகரன் தலைமை தாங்கினார். மஞ்சுநாதன் வரவேற்றார். மனோகரன், தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறவர் இன மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் ஏற்புரை ஆற்றினார். முடிவில் ரவி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்