கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு ஊர்வலமாக எடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-12 20:32 GMT

கும்பகோணம்:

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு ஊர்வலமாக எடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரியும், குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.பாலன் மாவட்ட பொருளாளர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கும்பகோணம் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து காய்ந்த நெற்பயிருக்கு பாடைகட்டி மாலை போட்டு மேளத்தாளத்துடன் தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர்.

ரூ.35 ஆயிரம் இழப்பீடு

காய்ந்து வரும் குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை காப்பீட்டு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து தலைமை தபால் நிலையத்திற்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தி நிறுத்தினர். உடனே போராட்டகாரர்கள் தபால் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ், சுந்தர்ராஜன், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளை 35-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை

இதேபோல் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரமோகன், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பக்கிரிசாமி, நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் விஜயன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கலியபெருமாள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

போலீசார் போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேலுவை தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து கைது செய்யப்பட்ட 35 பேரும் கையெழுத்து போட மறுத்து மதிய உணவை ஏற்றுக் கொள்ளாமல் மண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அம்மாப்பேட்டை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அம்மாப்பேட்டை நால்ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, மாதர் சங்க மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜாராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 48 பேரை அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்