தென்காசி கீழப்புலியூர் பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
தென்காசி கீழப்புலியூர் பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
தென்காசி கீழப்புலியூரில் உள்ள பாலவிநாயகர் மற்றும் சந்தி காவல் போத்தி சாஸ்தா கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துபாயை சேர்ந்த ஆடிட்டர் வெங்கடேஷ்வரன் - புவனேஷ்வரி தம்பதியினர் ஆலயத்தின் திருப்பணிகளை மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த 4-ந் தேதி மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. கர்நாடகா மாநிலம் சிருங்கேரி சாரதா பீடம் மஞ்சுநாத் பட் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாடன் தம்பிரான், உதிர மாடன் மாடத்தி, சுடலைமாடன் மாடத்தி, பட்டவராயர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சென்னை தொழிலதிபர் மணி சங்கர் தலைமை தாங்கினார். ஆய்க்குடி அமர்சேவா சங்க நிறுவனர் ராமகிருஷ்ணன் மற்றும் சென்னை டாக்டர் மணி ரமேஷ் - டாக்டர் உமா ரமேஷ் தம்பதியினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும், கும்பாபிஷகத்தை முன்னிட்டு நேற்று சுமார் 2,000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் நடராஜபட்டர், கணேசன், நகர்மன்ற உறுப்பினர் சந்துரு (எ) சுப்பிரமணியன், கோமதிநாயகம் என்ற கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.