சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம்

சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-27 19:00 GMT

சாமி சிலைகள்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபகோவிலான அருகே மலையில் அமைந்துள்ள பெரியசாமி மலைக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெரியசாமி மலைக்கோவிலில் உள்ள சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டது. அந்த சிலைகளை புதிதாக பிரதிஷ்டை செய்ய பாலாயம் நடத்தப்பட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பல லட்ச ரூபாய் செலவில் சுடு களிமண்ணால் அந்த சாமி சிலைகள் செய்யப்பட்டு, மலைக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கும்பாபிஷேகம்

8 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மலைக்கோவிலில் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. காலை யாகசாலையில் இருந்து இறை சக்திகளை மூலவருக்கு எழுந்தருளுவித்தல் நடைபெற்றது. பின்னர் 96 வகையான மூலிகை பொருட்கள், பழ வகைகளை வேள்வியில் இடுதல் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து சிவச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து கொண்டு மேள, தாளம் போன்ற இசை வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு சென்றனர். பின்னர் சுடு களிமண்ணால் செய்யப்பட்ட சாமி சிலைகளான செல்லியம்மன், பெரியசாமி, லாடசாமி, நாக கன்னியம்மன், செங்கமலை அய்யான், பொன்னுசாமி அய்யான், கொறபுள்ளியான் சுவாமி, ஆத்தடியார் சுவாமி, கிணத்தடியார் சுவாமி ஆகிய தெய்வங்களின் மீது பூசாரிகள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினர்.

திரளான பக்தர்கள்

இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர்கள், திருப்பணிக்குழு தலைவர் கங்காதரன், உறுப்பினர்கள், மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் கலியபெருமாள், கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், செயல் அலுவலர் வேல்முருகன், பணியாளர்கள், பூசாரிகள், பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்