முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வானமாதேவி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் அருகே வானமாதேவி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம் மற்றும் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை கோ பூஜை, தன பூஜை, நவகிரக ஹோமம் மற்றும் மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.