காட்டுப்புத்தூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2023-01-25 19:57 GMT

காட்டுப்புத்தூர் மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

மாரியம்மன் கோவில்

தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரில் பழமையான மகாமாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இங்கு விநாயகர், காளிகாம்பாள், ஸ்ரீ சப்த மாதர்கள், வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் உள்ளன.

தற்போது, இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிேஷகம் நடத்த கோவில் திருப்பணி குழு காட்டுப்புத்தூர் மற்றும் தலை கிராமத்தை சேர்ந்த தவிட்டுப்பாளையம், சீத்தப்பட்டி, கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று புனித நீராடி கோவிலுக்கு புனித நீர் எடுத்து வந்து யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இன்று கும்பாபிஷேகம்

நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாகுதி, 3-ம் கால பூஜை நடத்தி மகா தீபாராதனை நடத்தினர். இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் கால பூஜை தொடங்கி யாக வேள்விகள் நடத்தி மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்களால் கடம் புறப்பாடு நடத்தப்பட்டு கோவில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், கோபுர கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடத்தி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்