திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-12-13 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக சாலை பூஜை, மகா சாந்தி அபிஷேகம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை மற்றும் 2-ம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளுடன் கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணிக்கு கங்கையம்மன் கோவில் கோபுர விமானம் மீது புனிதநீர் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திருக்கோவிலூர் நகர முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி கோவிலில் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவு 8 மணிக்கு கொட்டும் மழையிலும் மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்காிக்கப்பட்ட வாகனத்தில் வாண வேடிக்கை, மேள தாளங்களுடன் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்