அய்யப்பன், அய்யனார் கோவில்களில் கும்பாபிஷேகம்
கறம்பக்குடி, நரியநேந்தலில் உள்ள அய்யப்பன், அய்யனார் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அய்யப்பன் கோவில்
கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு தினமும் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து கோமாதா பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தனம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து கடம் புறப்பாடு தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி கோவிலை வலம் வந்து பின்னர் அய்யப்பன் கோவில் மூலஸ்தான விமானத்திற்கு கொண்டு சென்றனர்.
கும்பாபிஷேகம்
தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து காலை 9.40 மணிக்கு கருட பகவான் கோவிலை வட்டமடித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கன்னிமூல கணபதி, துர்கா பரமேஸ்வரி, பாலதண்டாயுதபாணி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சரண கோஷங்களை எழுப்பினர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானமும், மாலையில் பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கூத்தப்பெருமாள் அய்யனார் கோவில்
ஆவுடையார்கோவில் அருகே நரியநேந்தல் கிராமத்தில் கூத்தப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் வீரமுனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலசங்களில் நிரம்பி வைத்து பூஜை செய்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் அய்யனார் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.