பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2023-02-16 16:46 GMT

கும்பாபிஷேகம்

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து 29-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனால் 3 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் கும்பாபிஷேக மண்டல பூஜை தொடர்ந்து, 48 நாட்கள் நடத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கும்பாபிஷேக மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரை பூஜை நடைபெறுகிறது.

20-ம் நாள் மண்டல பூஜை

அதன்படி நேற்று 20-ம் நாள் மண்டல பூஜை நடந்தது. உச்சிக் கால பூஜைக்கு முன்பு மலைக்கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் 12 கலசங்கள் வைத்து வேத மந்திரங்கள் முழங்க மண்டல பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜை நடைபெற்றது.

அப்போது 12 கலசங்களில் உள்ள புனிதநீரில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, 16 வகை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜை நடைபெறுவதால், ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்