பாரம்பரிய விவசாய கருவிகளை பாதுகாக்கும் குமரி விவசாயி
பாரம்பரிய விவசாய கருவிகளை பாதுகாக்கும் குமரி விவசாயி
திருவட்டார்:
பாரம்பரிய விவசாய கருவிகளை குமரி விவசாயி பாதுகாத்து வருகிறார்.
நெல் விதைப்பில் இருந்து அறுவடை வரை தற்போது அனைத்தும் எந்திரமயமாகிவிட்டது. இன்று நவீன தொழில் நுட்பத்துடன் கருவிகள் பல வந்தாலும் பாரம்பரிய கருவிகளுக்கு ஈடு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை.
நெல் சாகுபடி செய்யும்போது, வயலில் உழுவதற்கு, சமப்படுத்துவதற்கு, வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்கு, அறுவடை நேரத்தில் நெல்லை அளப்பதற்கு என பலவகையான கருவிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த கருவிகளை குமரி மாவட்டம் துவரங்காட்டை சேர்ந்த விவசாயி செண்பகசேகரன் பிள்ளை பாதுகாத்து வருகிறார்.
நெல் விதைகளை சேமிக்க பயன்படுத்தும் குலுக்கை என்கிற பானை, கலப்பை, மூக்கணாங்கயிறு, லாடம், ஊடு மண்வெட்டி வைத்துள்ளார். ஊடு மண்வெட்டி என்பது வயலில் விதைத்த நெல் ஒரே இடத்தில் குவியலாக இருக்கும் போது அந்த நெற்பயிரை வேற இடத்தில் நட வேண்டியது வரும். அப்போது இந்த ஊடு மண் வெட்டியை பயன்படுத்துவார்கள்.
குளத்தில் உள்ள தண்ணீரை வயலுக்கு இறைத்து விட பயன்படுத்தும் இறவட்டி, ஏழடி நீளம்கொண்ட உருண்டையான மூங்கில் கம்புடன் களைவிடும் கருவி, பொழித்தட்டு பலகை ஆகியவையும் உள்ளன.
மேலும் நெல்லை அளக்க பயன்படுத்தும் பக்கா. இது கால் பக்கா, அரை பக்கா, ஒரு பக்கா என்ற அளவிலும், சுமார் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பறையும் உள்ளது.
விவசாய கூலிகளுக்கு நெல்லை அளந்து கொடுக்க பயன்படுத்தும் மரைக்கால், கலப்பை, வள்ளக்கை, குறுங்காவளையம், மாட்டையும், கலப்பையையும் இணைக்கும் தொடக்கயிறு, துறண்டி, பனையோலை காக்கட்டை, தகர காக்கட்டை, கொம்புக் குப்பி, மாட்டுக்கு மருந்து கொடுக்கும் கொட்டம், லாடம் மற்றும் ஆணி, பறவைகளை துரத்தும் கவுண், கவட்டை, காளை மாடுகளின் விதைகளை நசுக்கும் கிட்டி, மாட்டை வதக்கும் சூட்டுக்கோல், சுளவு, கிணற்றில் வாளி தவறி விழுந்து விட்டால் அவற்றை மீட்டெடுக்கும் பாதாள கரண்டி, தொட்டில் கம்பு உள்பட பலவேறு வேளாண் கருவிகளையும், தளவாடங்களையும் இவர் பாதுகாப்பாக வைத்து உள்ளார். விவசாயகல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது இவரிடம் வந்து இவற்றைப்பார்வையிட்டு செல்வதோடு, விவசாய கண்காட்சிகளிலும் இவருடைய பொருட்களை வைத்து வருகிறார்கள். இவர் பாரம்பரிய நெல் விதைகளையும் பாதுகாத்து வருகிறார்.
செண்பகசேகரன் பிள்ளையின் விவசாய சேவைகள் மற்றும் ஆர்வத்தைப்பாராட்டி இருமுறை சிறந்த விவசாயிக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.