குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழா

குளித்தலை பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2023-02-18 18:51 GMT

குளித்தலை பஸ்நிலையம் பகுதியில் ஊர் காவல் தெய்வமான பேராளகுந்தாளம்மன் கோவில் உள்ளது. குளித்தலையில் உள்ள கோவில்களில் இந்த கோவில் முக்கிய கோவிலாகும். எல்லை பிடாரி அம்மன் என்றும் இந்த அம்மன் அழைக்கப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் இக்கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் இந்த கோவில் திருவிழாவையொட்டி கடந்த 8 -ந் தேதி காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கியது. பின்னர் கடந்த 12-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையடுத்து 14-ந்தேதி காலை குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் அன்று இரவு இக்கோவிலில் இருந்து ஓலை பிடாரி அம்மனுடன் புறப்பட்ட சப்பரத் தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதிகாலை இக்கோவிலை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து குளித்தலை அருகே உள்ள கிராம பகுதிகளான கோட்டமேடு, மைலாடி, குட்டப்பட்டி, அய்யனேரி, தாளியாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ஓலை பிடாரி அம்மன் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மீண்டும் கிராம பகுதியில் இருந்து குளித்தலை நகரப்பகுதிக்கு நேற்று முன்தினம் ஓலை பிடாரி அம்மன் கொண்டு வரப்பட்டு மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. நகரப்பகுதியில் நேற்று அம்மன் வீதிஉலா மற்றும் கிடாவெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் தேங்காய், இளநீர் கொண்டு பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனர். இரவு அம்மன் குடிபுகுதல் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்