குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி தேரோட்டம்
குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவில் வைகாசி தேரோட்டம் நடந்தது
குளித்தலை,
நீலமேகப்பெருமாள் கோவில்
கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் 7 -ந் தேதி கருடசேவையும், 10 -ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தேரோட்டம்
தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ேதர் முக்கிய வீதிகளான மாரியம்மன் கோவில், கடைவீதி, பஜனை மடம், ஆண்டார் மெயின் ரோடு, எம்.பி. எஸ்.அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு வழியாக உலா வந்து நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சென்ற வீதிகளில் பொதுமக்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். சிலர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
விடையாற்றி
நீலமேகப்பெருமாள் திருக்கோவிலின் வைகாசி விசாக தேர் திருவிழாவை தொடங்கிய நாள் முதல் நாள் உற்சவம் முதல் பகலில் பல்லக்கிலும், இரவில் ஹம்ச, ஹனுமந்த, ஷேச, யானை, குதிரை ஆகிய வாகனங்களில் உற்சவ மூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது.வீதி உலா முடிந்த பிறகு கண்ணாடி அறையில் சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அதுபோல தினந்தோறும் காலை , மாலை நேரங்களில் யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன.