'ராக்கெட் ஏவுவதற்கு சிறப்பான இடம் குலசேகரப்பட்டினம்' - மயில்சாமி அண்ணாதுரை
ராக்கெட் ஏவுவதற்கு சிறப்பான இடம் குலசேகரப்பட்டினம் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கொரோனா காலகட்டத்தில் பல தொழில்கள் பின்னடைவை சந்தித்தாலும், செயற்கைக்கோள்கள் அதிகமாக ஏவப்பட்டிருக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களுக்கு இணையாக, கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் 6 முதல் 7 ஆண்டுகள் வரைதான் இருக்கும். செயற்கைக்கோள்களின் ஆயுட்காலம் ஒவ்வொன்றாக முடியும் தருவாயில், நாம் புதிய செயற்கைக்கோள்களை அனுப்ப வேண்டும்.
இந்த பணிக்கு சிறிய ரக ராக்கெட்டுகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பான இடம் ஆகியவை தேவைப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை ராக்கெட் ஏவுவதற்கு உலகிலேயே சிறப்பான இடமாக குலசேகரப்பட்டினத்தைப் பார்க்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.