குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும்

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2022-11-30 22:41 GMT

தாம்பரம்,

சென்னை மாநகர போலீஸ் சார்பில், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 'சிற்பி மனிதம் பழகு' திட்டத்தில் சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கான தேசப்பற்று ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமை தாங்கினார். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

பெருமையின் அடையாளம்

அறிவியல் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு போன்றோர் அரசு பள்ளியில் படித்த மாணவர்களாக இருந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள். ஆகவே அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம்.

உங்களை(மாணவர்கள்) நீங்கள் செதுக்கி கொண்டே இருங்கள். வெற்றி பெற்றால் சிலையாகுங்கள். இல்லையேல் சிற்பியாக இருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

இதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

பின்னர் நிருபர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:-

மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு

தமிழக அரசு சிற்பி திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் பல்வேறு ஊக்கங்களை அளித்து வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தமிழகத்தை பொறுத்த வரைக்கும் மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்போது இளைஞர்கள், மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படுத்துவதாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஸ்ரீசாய்ராம் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, சென்னை மாநகர போலீஸ் தலைமையிட இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்