குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்;கலெக்டர்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாச நடன நிகழ்ச்சி நடக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின்போது, ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடக்காமல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்க எல்லப்பநாயக்கன் குளத்துக்கு தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். கோவில் வளாகம், கடற்கரை சுற்றி உள்ள பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். சுகாதாரத்துறை மூலம் திருவிழா காலங்களில் நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவகுழுவினர் 24 மணிநேரமும் ஆம்புலன்சு வசதியுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சிறப்பு ரெயில்
குலசேகரபட்டினத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற குலசேகரபட்டினம் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு போக்குவரத்துத்துறை மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யவேண்டும். தெற்கு ரெயில்வே மூலம் 9, 10 மற்றும் 11-ம் திருவிழா (4.10.2022, 5.10.2022 மற்றும் 6.10.2022) நாட்களில் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கவும், சென்னை - திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு தடை
தீயணைப்பு துறையில் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும். விழா காலங்களில் போலீசார் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவில் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவுப்படி தசராதிருவிழாவில் ஆபாசமான மற்றும் அநாகரிகமான நடன நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் மேற்படி நிகழ்ச்சிகள் நடக்காமல் கண்காணிக்கவேண்டும். தசராத் திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் மற்றும் உதவி கலெக்டர்கள், அனைத்து துறை அலுவலர்கள், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.