குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும்: இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் பேட்டி

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-15 18:45 GMT

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கூறினார்.

பேட்டி

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொன் விழா நேற்று வ.உ.சி. கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனியார் நிறுவனங்கள்

சந்திரயான் 3-ஐ இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதை தொடர்ந்து ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட உள்ளன.

தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை செலுத்தும்போது அந்த நிறுவனங்கள் என்ன நோக்கத்தக்காக அதில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற விவரங்களை இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் தெரிந்துகொண்டு அதன்பிறகே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். இதுவரை 140-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் செலுத்துவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளன.

அடுத்த ஆண்டுக்குள்...

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தேவையான 2 ஆயிரத்து 400 ஏக்கரில் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 400 ஏக்கர் நிலம் வருகிற நவம்பர் மாதத்துக்குள் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அங்கு காம்பவுண்டு சுவர், கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டுக்குள் இப்பணிகள் நிறைவுபெற்று, ராக்கெட் ஏவும் பணி தொடங்கும்.

இதற்கான கட்டுமான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு சுமார் ரூ.700 கோடி இருக்கும். இந்த ராக்கெட் ஏவுதளம் மூலமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும். ராக்கெட் ஏவுதளத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் புதிதாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி செயலாளர் ஏ.பி.சி.வி.சொக்கலிங்கம், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்