புதர்மண்டிய வாய்க்காலால் வறண்டு போன கண்மாய்கள்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் புதர்மண்டிய வாய்க்காலால் கண்மாய்கள் வறண்டு காட்சி அளிக்கின்றன.
10 கண்மாய்கள்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் சுமார் 543 ஏக்கர் பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்தநேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் அமைந்துள்ளது. இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.
இதில் ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூலவைகை ஆற்றில் இருந்தும் பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்தும் வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
வாய்க்கால் ஆக்கிரமிப்பு
கடந்த சில ஆண்டுகளாக கண்மாய்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கண்மாய்கள் அனைத்தும் தனிநபர் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதே போல பராமரிப்பு இல்லாத காரணத்தால் கண்மாய்களுக்கான வரத்து வாய்க்கால்களில் செடி, கொடிகள் ஆக்கிரமித்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதனால் மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் கண் மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக சென்றடைவதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகளவில் காணப்படுகிறது. வாய்க்காலில் நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் கண்மாய்கள் வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது.
விவசாயம் பாதிப்பு
அடுத்து கோடை காலம் தொடங்க உள்ளதால், தற்போது கண்மாய்களில் நீர் தேக்கி வைத்தால் மட்டுமே விவசாயத்திற்கு நீர் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். இல்லையென்றால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடகிழக்கு பருவமழை முடியும் முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் அனைத்திலும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிககள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.