கோடையிலும் வற்றாத ஏழு குளங்கள்

Update: 2023-06-11 17:18 GMT


கோடையிலும் வற்றாத ஏழு குளங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமூர்த்தி அணை

உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் மூலமாக பரம்பிக்குளம்-ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் காட்டாறுகள் பாலாறு மற்றும் திருமூர்த்தி மலைஆறு ஆகியவற்றின் மூலமாக மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரும் அணையின் நீராதாரங்களாகும். அதைக் கொண்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

திருமூர்த்தி அணை பாசனத்தில் அம்மாபட்டி குளம், செங்குளம், தினைக்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம், வளைய பாளையம் குளம், உள்ளிட்ட ஏழு குளம் பாசனம் வழங்கும். இந்த குளங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் நீராதாரங்கள் நீர்வரத்தைப் பெற்று நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது.

இதனால் கடும் வறட்சி நிலவக்கூடிய கோடைகாலத்தில் கூட ஏழு குளம் பாசனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளால் சாகுபடி பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தென்னை, வாழை, கரும்பு போன்ற நிலைத்து நின்று பலன் அளிக்கும் பயிர்களும் பரவலாக காய்கறிகள் சாகுபடியும் செய்யப்படுகிறது.

ஏழு குளங்கள்

இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக திருமூர்த்தி அணை நீர் இருப்பு குறைந்து போனது. ஆனால் அதன் மூலமாக நீர்வரத்தை பெற்ற ஏழு குளங்கள் போதுமான அளவு நீர்இருப்பைக் கொண்டு உள்ளது. இதனால் அவ்வப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் சாகுபடி பணிகளும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.

மேலும் குளத்தை ஆதாரமாகக் கொண்ட கிணறுகள் ஆழ்குழாய் கிணர்களிலும் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. வறட்சியின் கோரத்தாண்டவத்திற்கு நீராதாரங்கள் பாதிக்கப்படும் சூழலில் கோடை காலத்தில் சாகுபடி பணிகளுக்கு கை கொடுக்கும் அளவிற்கு ஏழு குளங்களில் நீர்இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்