குளச்சல் கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தம்

தடை செய்யப்பட்ட ‘காச்சா மூச்சா' வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்து குளச்சலில் கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-10-16 18:45 GMT

குளச்சலில் 300-க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்பும்.

கட்டுமரம், வள்ளங்கள் கரை அருகில் சென்று மீன்பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இந்த மீனவர்கள் தூண்டிலை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த கட்டுமங்கள் தடை செய்யப்பட்ட 'காச்சா மூச்சா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து, மீன்கள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.

இந்தநிலையில் காச்சா மூச்சா வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்து குளச்சலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இதில் பாதர் தாமஸ் கொச்சேரி மீன்பிடி தொழிலாளர்கள் யூனியன் உள்பட 4 மீனவ சங்கங்கள் மற்றும் கொட்டில்பாடு, சைமன்காலனி ஆகிய ஊரை சேர்ந்த கட்டுமர மீனவர்களும் கலந்து கொண்டனர். மீன்பிடிக்க செல்லாத கட்டுமரங்கள் மோடான பகுதியில் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்