விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த ஆசிரியை-மாணவர்களுக்கு பாராட்டு
விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வந்த ஆசிரியை-மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
பெரம்பலூர்:
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வ அமைப்பின் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்வி பெருவாரியாக சென்றடையாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும், கல்வி தொடர்பான குறிப்பாக அறிவியல் ரீதியான விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வகையிலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா பயணமாக அழைத்துச்சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதன்படி பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கல்வி மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை பெ.லெட்சுமி மற்றும் அரசு பள்ளியில் பயலும் 4 மாணவ, மாணவிகள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தும்பாவில் உள்ள இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சமீபத்தில் சென்றனர்.அங்கு ஏவுதளத்தில் இருந்து வானிலை ஆய்வுக்காக ராக்கெட் ஏவப்படுவதை காணும் நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி பி.எல்.பிரணவிகா, எம்.திருக்குமரன் மற்றும் இலந்தங்குழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் ச.அபிதா மற்றும் ப.தீபிகா ஆகியோர் பங்கேற்றனர்.மேலும் விண்வெளி அருங்காட்சியகம், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பல்வேறு விண்வெளி பயணங்கள் பற்றியும் மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதையடுத்து ஊருக்கு திரும்பிய ஆசிரியை பெ.லட்சுமி மற்றும் மாணவர்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் பாராட்டினார். மேலும் அர்களை வேப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.