இந்திரா நர்சரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

காவனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி மகா உற்சவ விழா பட்டிமன்றத்தில் பங்கேற்ற இந்திரா நர்சரி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-02-24 18:11 GMT

மாசி மகா உற்சவ பெருவிழா

ஆற்காடு தாலுகா திமிரியை அடுத்த காவனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மகா உற்சவ பெருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. இந்த விழா 27-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு, கடந்த 18-ந்தேதி இரவு 7 மணிக்கு மயானத்தில் கொடியேற்றம், 9 மணிக்கு காப்பு கட்டுதல், நள்ளிரவு 12 மணிக்கு பூதப்படை புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

19-ந்தேதி பூங்கரகம் வீதி உலா, வரிசை வருதல், அம்மன் மயானம் புறப்படுதல், அலகு குத்துதல், அம்மனுக்கு அந்தரத்தில் மாலை அணிவித்தல், மயான கொள்ளை சூறை, அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தது. 20-ந்தேதியில் இருந்து தொடர்ந்து மாணிக்க நாச்சியார், அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா உற்சவம் நடந்தது. 21-ந்தேதி மீனாட்சி குழுவினரின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.

பட்டி மன்றம்

நேற்று முன்தினம் காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில், குடும்பத்தில் விட்டுக் கொடுப்பதும், அனுசரிப்பதும் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. ஆண்களே என்ற தலைப்பில் புலவர் தங்கவேல், முனைவர் வேதநாயகி, இந்திரா பள்ளி மாணவன் பி.ஜீவா ஆகியோரும், பெண்களே என்ற தலைப்பில் பேராசிரியர் சவுந்தர், ராணிகுமாரி, இந்திரா பள்ளி மாணவி எஸ்.விசாலினி ஆகியோரும் வாதாடினர். டி.வி.புகழ் பேச்சாளர் திமிரி கவிஞர் தா.கோ.சதாசிவம் நடுவராக பங்கேற்று ஆண்கள், பெண்கள் 2 பேரும் விட்டுக்கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில், இலக்கியம், இதிகாசம் ஆகியவற்றில் கூட கணவன், மனைவி ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆண், பெண் உறவு பறவை போன்றது. கணவன் ஒரு சிறகு, மனைவி ஒரு சிறகு என்றார். பட்டிமன்றத்தில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை அனைவரும் பாராட்டினர்.

நிகழ்ச்சியில் வணிகர் சங்க தலைவர் எஸ்.உமாபதி, செயலாளர் சி.மோகனரங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு, கணக்காளர் கே.லட்சுமி சேட்டு, தலைமை ஆசிரியர் எம்.கோபி, ஆசிரியர் எம்.சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

வீதி உலா

நேற்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல், தீபாராதனை, புஷ்பம், மின் அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா வருதல், தேருடன் கரகாட்டம் ஆகியவை நடந்தது. இன்று (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு தேருடன் சின்ன பாலம்பாக்கம் சின்னா குழுவினரின் தாரை, தப்பட்டை, இரவு ஆரணி சிவா வழங்கும் திருவலம் அசோக் நாடக மன்றத்தினரின் நாடகம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாணிக்க நாச்சியார், அங்காள பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 2 மணிக்கு அம்மன் திருவீதி உலா வருதல், மாலை 6 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு வடா கஞ்சி பிரசாதம் வழங்குதல், சிறப்பு புஷ்ப, மின் அலங்காரத்துடன் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு சேவை, இரவு 10 மணிக்கு ஆரணி ஆனந்தன் வழங்கும் ரோஜா நாடக மன்றத்தினரின் நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கே.பி.எம்.ரவி, துணைத்தலைவர் ஆர்.திருமலை மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்