கிளைகால்வாய் குறுக்கே கட்டப்பட்ட பாலம் சேதம்

புதுப்பாளையம் கிளை கால்வாய் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-06-27 15:46 GMT

புதுப்பாளையம் கிளைக்கால்வாய்

பி.ஏ.பி.பாசன திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. புதுப்பாளையம் கிளைகால்வாய் மூலம் 2-ம் மண்டலத்தில் 7,219 ஏக்கர், 4-ம் மண்டலத்தில் 7,310 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பிரதான கால்வாயில் இருந்து பூசாரிப்பட்டி ஷட்டரில் பிரிந்து 40 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த கால்வாய் அமைந்துள்ளது. ஆங்காங்கே ஷட்டர்கள் அமைத்து 30 பிரிவு கால்வாய்கள் வாயிலாக விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் களிமண் பகுதியில் கால்வாய் கரைகள் வலுவிழந்து கான்கிரீட் சிலாப்புகள் படிப்படியாக விழதொடங்கியது. மழைக்காலங்களில் கனிமண்ணில் அதிக தண்ணீர் தேங்கி நிற்பதால் மண்சரிவும் ஏற்பட்டது. தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மிகவும் சேதம் அடைந்த பகுதிகள் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

புதுப்பாளையம் கிளை கால்வாய் கரைகளை புதுப்பிக்க ரூ.4 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் கரை சிலாப் கற்கள் முதலில் அகற்றப்பட்டன. கரையை ஒட்டியுள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் களிமண்ணை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அவ்விடத்தில் செம்மண் கொட்டி சீரமைக்கப்பட்டு. பின்னர் சமன்படுத்தி அதன் மேல் கான்கிரீட் சிலாப்கள் பதிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்திலும் சிமெண்டு கரை அமைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் களிமண்ணால் கரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். புதுப்பாளையம் கிளை கால்வாய் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்த நிலையில் அடிவள்ளி அருகே புதுப்பாளையம் கிளை கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் கரைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பழுதான பாலத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்