வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

Update: 2022-12-26 16:54 GMT


இலுப்ப நகரம் அருகே பி.ஏ.பி. தண்ணீர் கொண்டு செல்வதற்காக தோண்டிய பள்ளத்தை மூடாமல் பொதுப்பணித்துறை அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பி.ஏ.பி பாசனம்

பி.ஏ.பி. பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது இலுப்ப நகரம் ஊராட்சி. இலுப்பநகரம் ஊராட்சியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. கிராம இணைப்பு சாலை அருகே பி.ஏ.பி. தண்ணீர் கொண்டு செல்வதற்காக கடந்த பல மாதத்திற்கு முன்பு சாலையை ஒட்டி பள்ளம ்தோண்டப்பட்டது. பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மண் ரோட்டில் குவிக்கப்பட்டது. பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை மூடப்படவில்லை. இலுப்பநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

கிராம இணைப்புச் சாலை வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி நான்கு சக்கர வாகனங்களும் சென்று வரும். தற்போது சாலையில் மண் குவிக்கப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அடுத்த மாதம் ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர ்திருநாள் திருவிழா நடைபெற உள்ள நிலையில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மாட்டு வண்டிகளில் வந்து செல்வது வழக்கம்.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பி.ஏ.பி. தண்ணீரை கொண்டு செல்வதற்கு குழாய் அமைக்க வேண்டும் அல்லது தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தி தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்