கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதியில் ரூ.8 கோடியில் வளர்ச்சி பணிகள்; கலெக்டர் அம்ரித் ஆய்வு
கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடலூர்: கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ரூ.8.2 கோடியில் வளர்ச்சி பணிகள்
கூடலூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் நகராட்சி மூலம் ரூ.8.2 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வளர்ச்சி பணிகளை, கலெக்டர் அம்ரித் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அள்ளூர் வயல் பகுதியில் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு தலா ரூ.4.95 லட்சம் செலவில் மொத்தம் ரூ.49.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது ஆதிவாசி மக்கள் குள்ளன், ரேகா ஆகியோரை சந்தித்து கலெக்டர் பேசினார். பின்னர் வீடுகள் கட்டும் பணி தரமாக இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினார். பின்னர் தோட்டமூலாவில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.35.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஸ் நிலையம்
பின்னர் அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.32.65 லட்சம் செலவில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியை பார்வையிட்டார். இதையடுத்து ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீ மதுரை ஊராட்சி கூடூர் பழங்குடியினர் காலனியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64.42 லட்சம் செலவில் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட கொட்டமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33.05 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடத்தையும், அதே பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.8.14 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உறிஞ்சிக் குழாயை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் ரூ.4¾ கோடி செலவில் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில், ஓவேலி பேரூராட்சி தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் சகாதேவன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.