குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில்கருப்பசாமிக்கு 1,000 மதுபாட்டில்களை படையலிட்டு வழிபாடு
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் கருப்பசாமிக்கு 1,000 மதுபாட்டில்களை படையலிட்டு வழிபாடு நடந்தது.
குச்சனூர் கோவில்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் பிரசித்திபெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆடி மாதத்தின் 5 சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த வாரம் நடந்தது.
இந்த பூஜையில் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் முன்பு ஓடும் சுரபி நதியில் நீராடி, எள் தீபம் ஏற்றி, உப்பு, பொரியுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாக கருதப்படும் மண் காகத்தினை வைத்து வழிபட்டனர். விழாவின் நிறைவு நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மதுபாட்டில் படையல்
இதையொட்டி பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி 1,000-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வந்த மது பாட்டில்களை இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தங்களது பெயருடன் பதிவு செய்தனர்.
பின்னர் அவர்கள் மதுபாட்டில்களை உச்சிக்கால பூஜைக்கு வழங்கினர். இதையடுத்து சாமிக்கு மதுபாட்டில்கள் படையலிடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேர்த்திக்கடனாக செலுத்திய 26 சேவல், 43 ஆடுகள் சாமிக்கு பலியிடப்பட்டது. இதையடுத்து சேவல், ஆட்டு இறைச்சியை சமைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.