கிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது;கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-11-06 14:11 GMT

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீபத்திருவிழா, பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கடைகள் அமைப்பது குறித்து கிரிவலப்பாதையில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தரை கடை சிறு வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கிரிவலப்பாதை மற்றும் அதனை ஒட்டியுள்ள நடைபாதைகளில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக டீக்கடை, ஓட்டல் நடத்துபவர்கள் நாற்காலிகளை போட்டு வியாபாரம் செய்யக்கூடாது. நடைபாதையில் சிறு வணிகர்கள் கடை வைக்கக்கூடாது. நடைபாதையில் இடையூறு ஏற்படுத்துவதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. கிரிவலப்பாதை என்பது பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக மட்டுமே உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பழங்கள், பொம்மைகள் அவர்களின் பகுதிகளிலேயே கிடைக்கும். கிரிவலப்பாதையை வியாபார தளமாக மாற்றக்கூடாது.

மேலும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் போது அதில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்கக்கூடாது.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

கிரிவலப்பாதையில் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரிவலப்பாதையை சுத்தமாக வைத்து கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

மகா தீபத்தின் போது 56 இடங்களும், பவுர்ணமி நாட்களில் 12 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். ஆன்மிக பக்தர்கள் சொந்த இடங்களில் அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை. கிரிவலப்பாதையில் தற்போது இலவச கழிவறைகள் முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் இலவச கழிப்பறைகள் திறந்து வைத்து பராமரிக்கவும், குடிதண்ணீர் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகனி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள், போலீசார் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்