விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் பிரசித்திபெற்ற சித்திவிநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி, சஷ்டி, கிருத்திகை மற்றும் பங்குனி உத்திரம், வசந்த உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலங்களளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்தநிலையில் நேற்று கிருத்திகை மற்றும் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, முல்லை, சம்பங்கி, செண்பகம், தாமரை, வில்வம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் மற்றும் எலுமிச்சை பழ மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல விருத்தாசலம் வேடப்பர் கோவில், ஆதி கொளஞ்சியப்பர் கோவில், விருத்தகிரிகுப்பம், ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களிலும் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
(2 படம் 2 காலம்)