வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.;
நாடு முழுவதும் வைகானுஷ ஆகம விதிப்படி நேற்று முன்தினம் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ர ஆகமம் கடைபிடிக்கப்படுவதால் கிருஷ்ணர் அவதரித்த ரோகினி நட்சத்திரம் உள்ள நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், குழந்தை கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தேவகிக்கு சிறையில் பிறந்த கிருஷ்ணரை அவரது தந்தை வாசுதேவர் யமுனை நதியை கடந்து கோகுலத்தில் தனது நண்பர் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது மழை பெய்யும் நீர் குழந்தை கிருஷ்ணர் மீது படாமல் இருக்க நாகர் குடை பிடிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் குழந்தை கிருஷ்ணர் எழுந்தருளி சேவை சாதித்தார். வேத மந்திரங்கள் முழங்க ஆகம விதிப்படி சகல உபச்சாரங்களும் செய்யப்பட்டன. மங்கள ஆரத்தி நடைபெற்று பின்னர் மகா தீபாராதனை செய்யப்பட்டது.
குழந்தை கிருஷ்ணருக்கு கோகுலத்தில் பால் கொடுத்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் கிருஷ்ணருக்கு சங்கில் பால் நிவேதனம் செய்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக் கிழமை) மாலை உறியடி உற்சவம் நடைபெற உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை பிறந்ததை அடுத்து வளர்ச்சியை குறிக்கும் வகையில் விதை தானம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி பக்தர்களுக்கு நெல் விதை தானமாக வழங்கப்பட்டது. பெருமாள் கோவிலில் இருந்து பெறப்படும் விதை நெல் தங்கள் வயலில் நல்ல விளைச்சலை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.