சேலம்
சேலத்தில் இஸ்கான் சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சேலம் சோனா கல்லூரி மைதானத்தில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் தரிசன ஆரத்தி, பள்ளி மாணவர்களின் கிருஷ்ண லீலை நாடகம், குருகுல மாணவர்களின் பஜனை, கீதை பாராயணம் மற்றும் தாமோதர லீலை, வெண்ணை திருடிய கிருஷ்ணர், நாடகங்கள் ஆகியவை நடைபெற்றது.
இதையடுத்து கிருஷ்ண பலராமரின் விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி மற்றும் கீர்த்தனம் தொடர்ந்து நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மகா அபிஷேகமும், 12 மணிக்கு மகா ஆரத்தியும் சிறப்பாக நடந்தது. மைதானத்தில் இளம்பெண் ஒருவர் வண்ணப்பொடிகள் முலம் கிருஷ்ணர் வெண்ணை சாப்பிடுவது போன்று படத்தை வரைந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
அரங்குகள்
மேலும் விழாவில் ஆன்மிக புத்தக நிலையம் உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதை பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையொட்டி அங்கு சூரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.