கோவில்பட்டி-விளாத்திகுளம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியகாட்டுபன்றிகள்: விவசாயிகள் வேதனை

கோவில்பட்டி-விளாத்திகுளம் பகுதியில் காட்டு பன்றிகள் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-30 18:45 GMT

விளாத்திகுளம்:

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காட்டுபன்றிகள் ேசதப்படுத்தியதால், பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

நெருக்கடியில் விவசாயிகள்

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசி, மல்லி, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். எதிர்ப்பார்த்த மழை பெய்யாததால் விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தினை சந்தித்து வருகின்றனர். மேலும் உரத்தட்டுப்பாடு, சிறிதளவு கிடைக்கும் உரதையும் அதிகவிலை கொடுத்து வாங்கும் நிலை, விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காத நிலை, பூச்சி தாக்குதல் என பல்வேறு நெருக்கடிகளை தினந்தோறும் எதிர்க்கொண்டு வருகின்றனர். அனைத்து எதிர்க்கொண்டு விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுப்பன்றிகள் தொல்லை

இந்த நிலையில், இப்பகுதியில் காட்டுபன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. முத்தலாபுரம், வெம்பூர், படந்தபுளி, அயன்கரிசல்குளம், தலைக்காட்டுபுரம், மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்றிரவு காட்டுப்பன்றிகள் நிலங்களில் புகுந்து மக்காச் ்சோளப்பயிர்களை சேதப்படுத்தியுள்ளன.

வருவாய் இழப்பு

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, கம்பு போன்ற பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாயிகள் கோரிக்கை

மேலும் விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் காட்டு பன்றி தொல்லை கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருகிவோம். இதுகுறித்து வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் அத்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை உயர் அதிகாரிகள், வனத்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்