ஆல்கொண்டமால் கோவில் பாரம்பரியமான கிணறு பாதுகாக்கப்படுமா?

Update: 2023-01-04 17:13 GMT


சோமவாரப்பட்டியில் ஆல் கொண்டமால் கோவிலில் உள்ள பாரம்பரியமான கிணற்றை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆல்கொண்டமால் கோவில்

சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாகபாலை சுரந்து வந்தன.

சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம் பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்ட போது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல் கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவ புற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

காவல் தெய்வம்

கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில் விளங்கி வருகிறது ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராமபுறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கோவிலின் நுழைவாயில் அருகே பாரம்பரியமான கிணறு உள்ளது. பக்தர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுத்துச் செல்லும் வகையில் கிணறு அமைந்துள்ளது. கிணற்றின் அருகே கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் வகையில் கல் தொட்டி உள்ளது.

தற்போது கிணற்றின் சுற்றுச்சுவர் முழுவதும் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் திறந்து கிடக்கிறது. கிணற்றில் தற்போது தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் கிணற்றை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் பாரம்பரியமான இந்த கிணற்றை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்