திருப்பூர் அரிசிக்கடை வீதியில் டவுன் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் உள்ள வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேறாமல் கோவில் முன்புறம் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக மழை பெய்தால் கழிவுநீருடன் மழை நீரும் தேங்கி காணப்படுகிறது.
இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி டவுன் மாரியம்மன் கோவில் முன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது. ஆனால் அதற்கு முன் கழிவுநீர் தேங்கியிருப்பதால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர், பக்தர்கள் மீது தெளிப்பதாக தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.